இறைவர் : அருள்மிகு வேதகிரிஸ்வரர்
இறைவி : அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்
இறைவர் : அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் (தாழக்கோவில்)
தல மரம் : வாழை மரம் (கதலி)
தீர்த்தம் : சங்குத் தீர்த்தம்
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் கன்னி லக்னத்தில் வரும் நாளன்று லட்சதீபத்திருவிழா(Lakshadeepam) கொண்டாடப்படுகிறது. அன்று வீடுகளிலும், கோயில்களிலும், சங்குதீர்த்த குளக்கரையிலும் லட்சக் கணக்கில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஊர் முழுவதும் ஒளி வெள்ளத்தில் மிதக்கும். சங்கு தீர்த்தத்தில் நிகழும் நாள் மாலை மலையிலும், தாழக்கோயிலிலும் அகல் விளக்குகள் ஏற்றுவர்.இரவு திருக்கல்யாண விழா(thirukalyanam) நடைபெறும்,வேதகிரிஸ்வரர் இடப வாகனத்தில் வீதி உலா வருவார்
அளகை, அம்பை, இந்திரபுத்திரா, உருத்ரா, கங்கை, காளிந்தி, கவுதமை, கம்பை, காவேரி, கோமுகி, சரஸ்வதி, சரயு, சிங்கை, சிந்து, சோமம், சோவதி, தாமிரபரணி, துங்கபத்ரை, தென்குமரி, தேவிகை, நருமதை, நந்தினி, பம்பை, பாலி, பிராமி, பினாகி, பெண்ணை, பொருகை, பொன்முகரி, மலப்பிரதரிணி, மந்தாத்திரி, மணிமுத்து, யமுனை, வேத்திரவதி, கைதரிணி, வைகை முதலிய நதிகள் அனைத்தும் முன் ஒருகாலத்து எம்மினும்மிக்கார் ஈரெழுதலுத்தும் இல்லைகண்டாய் எனத் தத்தம் பெருமை பாராட்டி ஒன்றொடொன்று விளைத்த கடுஞ்சமர்கண்டு அந்த நதிகட்கெல்லாம் கணவனாய கடலரையன் கலக்கமெய்தி, எத்துணைவகையோ முயன்றும் தேவியரைத் தெளிவிக்க இயலாமல், குரு சிம்ம ராசியில் பிரவேசிக்கும் அமைத்துத் தோன்றும் கோதாவரி புஷ்கரத்திற்கு அனைவரையும் அழைத்துச்சென்று ஆங்குத் திருக்கோயிற்கொண்டெழுந்தருளியுள்ள ஸ்ரீ கோடீஸ்வரர் மலரடியின் வீழ்ந்தெழுந்து தேவியர் பிணக்குரைத்து வருந்த, கடல்மன்னனின் கவலைகண்ட கண்ணுதற்பெருமான், அவன்றன் இல்லக்கிழத்தியர் முகம்நோக்கி, நேரிழையீர்! பெரியர்யாம் எனத்தம் பெருமையப் பேசுவாரெவரும் பேதையரே எனும் எமது மறைமொழி,உம்மிடத்து அனுபவமாயதை இனி வல்லது,குறைகள் அனைத்தையும் குறைக்கவல்லது சங்கு தீர்த்தமொன்றே யென்பதை இதுகாறுங் கேட்டீலிரோ? யாமே யாமே பெரியரெனத் தருக்கிய நிலையால் நீவீர்தேடிய தீவினையைத் தீர்த்துக்கொள்ள, குரு கன்யாராசியில் பிரவேசிக்குங்கால் மாண்புறு மாதவர் அமரர் மற்றுளாரனைவரும் ஏத்தும் அச்சங்கு தீர்த்த புஷ்கரத்தின் முழுக்காடச் செல்மின்; அக்காலமும் அண்மையே உளது விரைமின் விரைமின் என்ற விமலன் மொழிப்படி பணிந்து மீண்ட அந்நதிகளெல்லாம் கடல் மின்னனுடன் குறித்த புஷ்கரகாலத்து சங்குதீர்த்தத்தில் முழுகி பெறுதற்கரிய பேறனைத்தும் பெற்றனர் எனுமிவ்வரலாறு, கந்தபுராணம் சநற்குமார சம்மிதை உருத்ர கோடிமான்மியம் 14-வது அத்யாத்திலும் திருக்கழுக்குன்ற தலபுராணத்திலும் உள்ளது. இச்சங்குதீர்த்தக் புஷ்கரம் பன்னிரு ஆண்டுகட்கொருமுறை நிகழ்வதை அனைவரும் அறிவர்.
இத்தகைய சிறப்புமிக்க திருத்தலத்தில் பன்னிரெண்டு ஆண்டுகட்கு ஒருமுறை குரு கன்னியா இராசியில் பிரவேசிக்கும் திருநாளன்று நடைபெறுவது சங்கு தீர்த்த புஷ்கர மேளா – இலட்ச தீப (Lakshadeepam) பெருவிழாவாகும். இப்பெருவிழா கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகத்திற்கு சமமானதாகும் 02.08.2016-ம் நாள் காலை 9.30 மணிக்கு சங்கு தீர்த்த புஷ்கரமேளா – தீர்த்தவாரியும், அன்று மாலை 6.00 மணிக்குமேல் திருக்கழுக்குன்றம் நகர அனைத்து திருக்கோயில்கள், திருமலை, தீர்த்தகுளங்கள், மாட வீதிகளில் ஒரு இலட்சம் அகல் விளக்குகளால் ஏற்றப்படும் இலட்சதீபமும் திருக்கழுக்குன்றம் நகரம் முழுவதும் மின் அலங்காரமும், பஞ்சமூர்த்திகள் மகா அபிஷேகம், திருக்கல்யாணம், பஞ்சமூர்த்தி உலா ஆகியவையும் மிகச் சிறப்பாக நடைபெற்வுள்ளது. இவ்விழா வட தமிழ்நாட்டில் நடைபெறும் மிகப்பெரிய விழாவாகும்.